செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

மணிமங்கலம்



அப்பாடா... இன்று ஒரு நாளாவது நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று சனிக்கிழமை நண்பகல் சாப்பிட்டு விட்டு சாய்கையில், செல்போன் சிணுங்கியது, கிளம்புங்க "மணிமங்கலம்" போகலாம் என்று ரமேஷ் சொல்ல, அரை மனதுடன் சம்மதித்தேன், நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் தூங்கிடாதீங்க என்று கூறி விட்டு போனை துண்டித்துவிட்டார்.
"மணிமங்கலம்" தாம்பரத்திற்கு மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் அழகான கிராமம், தமிழகத்தில் உள்ள சில ஊர்களோடு மட்டும் தான் நீண்ட நெடிய வரலாறு பின்னிப் பிணைந்திருக்கும், அப்படிப்பட்ட சில ஊர்களின் பட்டியலில் இந்த மணிமங்கலமும் வருகின்றது, நூறு இருநூறு ஆண்டு வரலாறு இல்லை, 1300 வருட வரலாறு!.

இந்தியாவிலேயே 9 மன்னர்கள் தான் தன்னுடைய வாழ்நாளில் தோல்வியே சந்தித்திறாத மனிதர்கள் என்று வரலாறு அழைக்கின்றது, இந்த ஒன்பதில் தமிழகத்தை ஆண்ட 5 மன்னர்கள் உள்ளடுங்குவர், அந்த ஐந்தில் ஒருவன் தான் மாமல்லன் என்று அழைக்கப்பட்ட முதலாம் "நரசிம்ம பல்லவன்" ஆம் நரசிம்ம பல்லவனுக்கும் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்குமிடையே பெரும் போர் நடந்தேறிய இடம் தான் இந்த மணிமங்கலம்,

காஞ்சிபுரம் அருகே இருக்கும் "புள்ளலூர்" என்ற இடத்தில் மாமல்லனின் தந்தை மகேந்திர பல்லவன் புலிகேசியுடன் போரிடுகிறான், போரில் பல்லவர்கள் சில பகுதிகளை இழக்கிறார்கள், ஆனால் புலிகேசியால் காஞ்சிபுரத்தை கைப்பற்ற முடியவில்லை, ஆதலால் மீண்டும் பெரும் படைதிரட்டிக்கொண்டு புலிகேசி பல்லவனுடன் போரிட வருகிறான், இம்முறை போர் மணிமங்கலத்தில் நடக்கின்றது, இம்முறை புலிகேசியை மாமல்லன் வென்றுவிடுகிறான், இவனை விட்டு வைத்தால் மீண்டும் மீண்டும் வந்து தனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பான் என்று மாமல்லன் தன்னுடைய படைத் தளபதி "பரஞ்சோதியுடன்" அவன் நாட்டிற்கே சென்று தன தந்தையை தோல்வியுறச் செய்தவனான புலிகேசியை கொன்று, அவன் தலை நகரான வாதாபியை எரித்து தரைமட்டமாக்குகிறான், அன்று அழிந்த வாதாபி அதன் பிறகு மீண்டும் எந்த மன்னனுக்கும் தலை நகராய் அமைந்ததே இல்லை என்றால் எவ்வளவு பெரிய பேரழிவு என்று யோசித்துப் பாருங்கள். அங்கிருந்த வெற்றியின் நினைவாய் பரஞ்சோதி கொண்டு வந்த கணபதி இன்றும் தமிழ்நாட்டில் அருள்புரிகிறார்.

ஊரை வந்தடைந்தோம், சென்னைக்கு அருகே இருந்தாலும் விவசாயம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது, ஏரியில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வாய்காலில் பாய்ந்துகொண்டே இருந்ததை காணமுடிந்தது, வாக்காளில் நீர் ஓடுவதால் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து அங்கிருந்த கிணறு, குளங்கள் எல்லாம் தரை தொடும் அளவிற்கு நீர் நிறைந்திருந்தது.

ஊர் பற்றியே நிறைய எழுதிவிட்டதால் கோயிலை பற்றி சுருக்கமாக எழுவேண்டிய கட்டாயத்தில் எழுதுகிறேன், போருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை மனிதர்கள் அனைவருக்கும் சமமாகத்தான் இந்த பூமியை படைத்தேன், அடித்துக்கொள்ளாமல் வாழத்தான் ஆறாம் அறிவையும் கொடுதேன் இருப்பினின் ரத்த ஆறு ஓடிய மண்ணில் எனக்கென்ன வேலை என்பதைப் போல் ஊரை விட்டு விலகி வயலுக்கு நடுவே இருந்தார் "தர்மேசுவரர்". சோழர் கல்வெட்டில் "தன்மீச்சரர்" என அழைக்கப்பட்ட இறைவன் தற்போது தர்மேசுவரர் என வணங்கப்படுகிறார். இக்கோவிலில் 10ம் நுாற்றாண்டு துவங்கி, மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் போன்றோரின் கால கல்வெட்டுக்கள் வரை உள்ளன. இந்த கோயிலில் நவகண்ட சிற்பங்களையும் கண்டோம்.

Sasi Dharan's photo. 
போரில் தன்னுடைய மன்னன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ அல்லது இந்த கோயில் நல்லமுறையில் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை, நிறைய வீரர்கள் தங்களுடைய தலைகளை காணிக்கையாக தந்துள்ளனர். தூங்கானை மாட வடிவில் அமைந்த அற்புதமான கோயில், நல்ல வேலைபாடுகள் உள்ளது, பெரிய கோயில்களுக்கு சென்று வரிசையில் நின்று முட்டி மோதி நிம்மதியை இழப்பதை விட, இயற்கை எழில் சூழ்ந்த மக்கள் நடமாட்டம் இல்லாத சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த அமைதியான இடத்தில் இருக்கும் இந்த ஊரை காண கட்டாயம் செல்லுங்கள். உங்களை எதிர்க்க புலிகேசி இல்லை. ஆனால் உங்களை வரவேற்க தர்மேசுவரர் இருக்கிறார். பயணம் இனிதாகட்டும்.
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை: