திங்கள், 27 ஜனவரி, 2014

மனித உயிர் விலை மதிப்பற்றது

இந்த வாரம் இதழ்

மேலை நாடுகளில் உள்ள ரயில் பெட்டிகளில், எங்காவது மின் கசிவு ஏற்பட்டால் மின்சாரம் உடனே தடைப்படும். எங்காவது  புகையத் தொடங்கினால், அலாரம் ஒலித்து, உடனே ரயில் தானாகவே நின்றுவிடும். அதற்கான தொழில்நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன. அதை நாமே கூட இந்தியாவில் உருவாக்கிப் பயன்படுத்த முடியும்.

ஆனால் நம் ரயில் பெட்டிகளில் சாதாரண தீயணைப்புக் கருவிகூட கிடையாது அல்லது அது எங்கிருக்கிறது என்றுகூடப் பயணிகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு பெட்டியிலும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, அவை அபாயச் சங்கிலியைப்போலப் பயணிகள் கவனம் பெறும் வகையில் குறிப்பிடப்பட வேண்டும்.

விமானங்களில், விபத்துகளின்போது வெளியேறும் அவசர வழிகள் தெள்ளத் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும். அதைக் குறித்து ஒவ்வொரு பயணத்தின்போதும் பணியாளர் ஒருவர் விளக்குவதும் வழக்கம். ரயில் பெட்டிகளில் பணியாளர்களைக் கொண்டு விளக்குவது என்பது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் அவசர வழிகள், அதைக் குறித்த கையேடுகள், பெட்டிகளில் ஒட்டக் கூடிய ஸ்டிக்கர்கள் இவையெல்லாம் சாத்தியமானவையே. இதைக் குறித்த வீடியோ காட்சிகளைக்கூடத் தயாரித்து ரயில் நிலையங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பலாம்.

தொழில்நுட்பம், அக்கறை, விழிப்புணர்வு எனச் சிறிதும் பெரிதுமான நடவடிக்கைகள் ஆட்டம் காணும் நம்பிக்கையை மீட்டெடுக்கத் தேவை என்று ரயில்வே நிர்வாகம் உணர வேண்டும். அதைவிட அது முதலில் உணர வேண்டியது, மனித உயிர் விலை மதிப்பற்றது என்பதை. அந்த எண்ணம் வந்தால் எல்லாம், தானே பின்னால் வரும், என்ஜினுக்குப் பின் வரும் ரயில் பெட்டிகள் போல.

கருத்துகள் இல்லை: